நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 20, 2013

பழனியம்பதி

திருஆவினன்குடி!...

நக்கீரர்  குறிக்கும்   ஆறுபடை வீடுகளுள்  - மூன்றாவது படைவீடு.

ஆதியில் திரு - இலக்குமி, ஆ - காமதேனு, இனன் - அக்னி ஆகியோர் வணங்கிய தலம்! 

இந்தப் படை வீடு, பழனி மலையின் கீழ் உள்ள ஆலயம்! பாலமுருகன் மயில் மேல் அமர்ந்த வேலாயுத ஸ்வாமியாக கருவறையில் காட்சி தருகிறான். முருகன் குழந்தை வடிவாக விளங்குவதால் வள்ளி, தெய்வானையர் அருகினில் இல்லை. தீர்த்தம் - சரவணப் பொய்கை. தலமரம்  - கடம்பு.

பின்னாளில் சித்த புருஷரான போகர், நவபாஷாணத்தில் தண்டாயுதபாணி சிலை வடித்து மலை மேல் நிறுவிய பின்னர்,  மலைக் கோயில் படை வீடாகி விட்டது. மலையின் மேல் போகர் வழிபட்ட தண்டாயுதபாணியும் கீழே படைவீட்டில் உள்ள குழந்தையும் வேறு வேறல்ல! எனினும்,

திருவாவினன்குடி குழந்தை வேலாயுதப் பெருமானை வணங்கிய பின்னரே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.


பழனி முருகனின் அருளும்  - வாசனை விபூதியும் பஞ்சாமிர்தமும்  ஒன்றோடொன்று  இணை பிரியாதவை. 

பழனி பஞ்சாமிர்தம் - விருப்பாட்சி வாழைப்பழங்களுடன் சர்க்கரை, பேரீச்சை , உலர்ந்த திராட்சை, கற்கண்டு, நெய், ஏலக்காய் - இவைகளைப் பாரம்பர்ய முறைப்படி பக்குவமாகக் கலந்து செய்யப்படுவது. இதனை மலைக்கோயில் முருகனுக்கு அபிஷேகம் செய்தால் - அது தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் மருந்தாகி விடுகின்றது.

கஞ்சமலை காலங்கி நாதர் தனித்துவமான சித்தர். இவருடைய சீடர் தான் போகர். காலங்கி நாதர் தனது  தீர்க்க தரிசனத்தால் எதிர்காலத்தில் நோய்கள் மலியும் என்று போகருக்கு அறிவித்தார்.

போகர் - தன் சீடராகிய புலிப்பாணி உதவியுடன் - நோய்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற ஆவலுடன், நவபாஷாணம் என்னும் ஒன்பது விஷங்களைக்  கலந்து,  மருந்தாக ஆக்கி -  அதைக் கொண்டு தண்டாயுதபாணி சிலையை வடித்தார்.

நவபாஷாண திருமேனியில்  செய்யப்படும் - அபிஷேக நீரில், பாலில், திருநீற்றில், பஞ்சாமிர்தத்தில் - நவபாஷாணம் கரைந்து கலந்து விடுவதனால்,  அவை மருந்தாக மாறுகின்றன. அதைப் பிரசாதமாக அருந்தும் அன்பர்களின்  நோய்கள்  தீரும் என்பது சித்தர் பெருமானின் திருக்குறிப்பு!.

இதனால்தான் தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு தனித்தன்மையான மகத்துவம்.


அடிவாரத்தில் அருள்மிகு பாதவிநாயகரை வணங்கி, மலை ஏறினால்  பதினெட்டாம்படியில் கருப்பஸ்வாமி!. அவரைத் தரிசித்து படையேறினால் - வழியில் இடும்பன் சன்னதி. அகத்திய மாமுனிவரால் நல்வழிப்படுத்தப்பட்ட இடும்பன், அவர் பொருட்டு சிவகிரி, சக்திகிரி எனும் இரண்டு மலைகளைக் காவு தடியில் கட்டித் தோளில் தூக்கிக் கொண்டு தெற்கே வந்தவன் இறை நாட்டத்தால் கீழே வைக்க அவை இங்கேயே நிலை பெற்றன என்பது தல புராணக் குறிப்பு. இடும்பனின் காவுதடி தான் பின்னர் காவடி என்றானது. மலையில் சுமைகளுடன் ஏறுவோர்க்கு சுகமானது.

இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலையில் இவருக்கு அபிஷேகத்துடன் ஆராதனைகள் நடக்கும். அதன் பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடியுடன் செல்லும் பக்தர்கள் இடும்பன் சன்னதியில் வணங்கிய பின்பே செல்கின்றனர். சன்னதியில் அகத்தியகுருநாதருடன் இடும்பனும், கடம்பனும் இருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டல தீர்த்தம் தரப்படுகிறது.

மலையில் ஏறும்போது இடும்பன் மலையைக் காணலாம். பழனியின் வயல்வெளிகளின் ஊடாக ஓடும், சண்முக நதியைக் காணலாம்!...


பழனியம்பதி வாழ் பாலகுமாரன் திருமூலத்தானத்தில் பதினைந்து வயது சிறுவனாக வலது திருக்கரத்தினில் ''தண்டம்'' - எனும் கோல் தாங்கி விளங்குகின்றான். அதனால் தண்டாயுதபாணி! வேல் தனியே திகழும்! பார்க்கப் பார்க்க திகட்டாத திருமேனி!..

மலை மேல் மூலஸ்தனத்துக்கு அருகில் போகரின் நிர்விகல்ப சமாதி உள்ளது

தினந்தோறும்  மலைக் கோயிலில் தங்கரதம்  வலம் வரும் பெருமையினை உடையது பழனி!. திருவண்ணாமலையைப் போலவே சித்தர்கள் வாழ்ந்த தலம். பழனி மலையும் கிரிவலச் சிறப்பினை உடையது!.

வருடம் முழுவதும் வைகாசி விசாகம், சஷ்டி, தைப்பூசம் - என திருவிழாக்கள். எனினும் பழனியில் மிகப் பெரிய திருவிழா - பங்குனி உத்திரம் தான்!... தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் காவடிகளுடன் கடல் அலையெனத் திரளும்  பாதயாத்திரைத்திருவிழா!...

வெகு விமரிசையாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  பாதயாத்திரையாக வந்து அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசித்து அருள் பெறுகின்றனர். கொங்கு நாட்டின் பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் தாங்கி வந்து அபிஷேகம் செய்கின்றனர்.

சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திரத்திருவிழா திருஆவினன்குடி கோவிலில் வருகிற நாளை  புதன்கிழமை (மார்ச் 20)  காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில்  தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமாரசாமி - தந்த சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்க குதிரை  என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி  கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

25-ந்தேதி இரவு  திருக்கல்யாணம், அதனை தொடர்ந்து வெள்ளித்தேர் வீதி உலா. 26-ந்தேதி சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தேரோட்டம்  நடைபெறுகிறது.  29-ந்தேதி விடையாற்றி.

தமிழகத்தில் அரசுக்கு மிக அதிக அளவில் வருமானத்தைத் தரும் முதல் கோயில் இதுதான்..


தன்னை அடைந்தார்க்கு ஞானத்தையும் முக்தியினையும் அருளும் பழனியாண்டி தான் - தமிழக அரசுக்கு  பொன்னையும் பொருளையும் அள்ளித் தருகின்றான்!...

வேலும் மயிலும் துணை!..
முருகன் திருவருள் முன் நின்று காக்க!...

திருச்சிற்றம்பலம்!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..