நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 14, 2016

நலந்தரும் வராஹி



ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
திருமந்திரம் 4/5/28. 

சங்கு, சக்கரம், ஏர், உலக்கை (முசலம்), அங்குசம், பாசம் தாங்கிய திருக் கரங்களுடன் அபயமும் வரதமும் அருள்பவள் வராஹி!.. 

இழிகுணமுடைய ஈனர்களின் தேகத்தினை இடித்து நசுக்கி ஒழிப்பதற்கு உலக்கை (முசலம்) மற்றும் ஏழு படைக்கலன்களைத் தாங்கியவள் வராஹி,

குற்றங்களின்று நிங்கியவராக - தன்னைத் தியானிக்கும் அன்பர்களின் உள்ளங்களில் என்றென்றும் புன்னகையுடன் ஓங்கி விளங்குபவள் வராஹி!.. 

- என்பது திருமூலரின் திருவாக்கு!..

''..மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வராஹி!.''

என்று புகழ்பவர் - அபிராமபட்டர்!

இங்கே, மருந்து எனக் குறிப்பிடப்படுவது - அமிர்தம்!..
அமிர்தத்தினை விட இனிய சொற்களைப் பேசுபவளாம் அன்னை!..


அதனால் தான் அவளிடமிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றியது.

புவனம் பதிநான்கைப் பூத்தவளும் அவளே..
பூத்த வண்ணம் காத்தவளும் அவளே..
புன்னகையுடன் காப்பவளும் அவளே!..

அப்படிப்பட்டவள் தான் -
வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு
ஸ்ரீவராஹி எனத் திருக்கோலங்கொண்டனள்..

ஸ்ரீ வராஹி மிகச் சிறந்த வரப்ரசாதி!..

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் ஸ்ரீ வராஹி!..
ஸ்ரீ லலிதாம்பிகையின் படைகளுக்குத் தலைவியானவள் ஸ்ரீ வராஹி!..

சதுரங்கசேனா நாயகி எனும் திருப்பெயர் கொண்டவள் - ஸ்ரீ வராஹி!..
சப்த கன்னியருள் ஐந்தாவதாக விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!..

பஞ்சமி எனும் திதிக்கு அதிபதியானவள் - ஸ்ரீ வராஹி!..
அதனால் வளமைக்கும் செழுமைக்கும் உரியவள் - ஸ்ரீ வராஹி!..
  
நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் -
ஐந்தாவதாக நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி..

வேளாண்மைக்கு உரியதான கலப்பையையும் 
தொழிலுக்கு உரியதான உலக்கையையும் 
திருக்கரங்களில் தாங்கியிருப்பவள் ஸ்ரீ வராஹி!..

ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும்,
புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,
தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும்,
பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும்

ஆன்றோர்கள் வகுத்தளித்த வைபவங்களுள் சிறப்பானவை. 

இவற்றுள் - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரிக்கு உரியவள் - ஸ்ரீ வராஹி!..


அளவற்ற சக்தியுடன் விளங்குபவள் - ஸ்ரீவராஹி..
அதிலும் ஆதார சக்தியாகத் திகழ்பவள் - ஸ்ரீ வராஹி!..

நெஞ்சின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருபவள் - ஸ்ரீ வராஹி!..
நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவள் - ஸ்ரீ வராஹி!..

வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

வளமைக்கும் செழிப்புக்கும் பச்சைப் பசுமைக்கும் அதிபதியானவள்..  
வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!.. 

ஆதியில் இருந்தே விவசாயம் தான் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது. 

உலகிலுள்ள கருவிகளுள் மேன்மையாகத் திகழ்வது - ஏர்!..
வேளாண் கருவிகளுள் முதலாவதாக விளங்குவது - ஏர்!..

சுழன்றும் ஏர் பின்னது உலகம்!.. - என்பார் வள்ளுவப் பெருமான்!..

இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

வளமையும் செழிப்பும் ஆனி மாதத்திலிருந்தே தொடங்குகின்றன..

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து
வயலில் நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில்
எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனி மாதத்தில்!..

எனவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.

வேளாண்மையின் ஆதார தெய்வம் - ஸ்ரீ வராஹி!..  


தென்னகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் சோழவளநாட்டின்
தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரின்
அதிபதியாகத் திகழ்பவள் - ஸ்ரீ வராஹி!..

மாமன்னன் ராஜராஜ சோழனின் வழித்துணை ஸ்ரீ வராஹி!..

குமரி முதல் நர்மதை வரை மட்டுமல்லாமல் 
கடல் கடந்த தேசங்களிலும் கலம் செலுத்தி
மாபெரும் வெற்றிகளை எளிதாக சாதித்ததற்கு

பெருந்துணையாகத் திகழ்ந்தவள் - ஸ்ரீ வராஹி!..  

சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..

இன்றும் - தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் பல்லாயிரம் பக்தருக்கும் உற்றதுணை என வருபவள் ஸ்ரீ வராஹி!..

அருள்மிகும் பெருவுடையார் திருக்கோயிலில் -
அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு சிறப்பான முறையில்
இந்த ஆண்டும் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது..

தமிழகத்தின் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தகன்னியர் திருமேனிகள் திகழ்ந்தாலும்  -

காசியம்பதிக்கு அடுத்து - தஞ்சை பெரியகோயிலில் தான் -
தனி சந்நிதியில் விளங்குகின்றனள் ஸ்ரீ வராஹி ...

பெரியகோயிலின் தெற்கு திருச்சுற்றின் பிரகார மண்டபத்தில் சப்த கன்னியருக்கும் மாமன்னன் திருமேனிகளை வடித்து வழிபட்டனன்..

ஆனால் - காலவெள்ளத்தின் ஓட்டத்தில்
நமக்கு கிடைத்திருப்பவள் ஸ்ரீ வராஹி மட்டுமே!..

எஞ்சிய திருமேனிகள் என்னவாயின - என்பதைக் கூறுதற்கில்லை..  


தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு -
கடந்த அமாவாசை தினத்தன்று (ஆனி 20 /ஜூலை 4) காலை மஹாகணபதி ஹோமத்துடன்  ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியது.

தொடர்ந்த நாட்களில் -

காலைப் பொழுதில் திருச்சுற்று மண்டபத்தில் -
அஷ்டபுஜ வராஹி அம்மன் உற்சவத் திருமேனியளாக எழுந்தருளினாள்..

மூல மந்த்ரத்துடன் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி..

தொடர்ந்து - சந்நிதியில் மஹாஅபிஷேகம்.

மாலையில் சிறப்பு அலங்காரம்... மகா தீபாராதனை தரிசனம்..

மஞ்சள், குங்குமம், சந்தனம், இனிப்பு வகைகள் - எனும் மங்கலங்களால் அலங்கரிக்கப்பட்டாள்...

அடுத்தடுத்த நாட்களில்  -

தேங்காய் பூவினாலும், மாதுளை முத்துக்களாலும், நவதானியங்களாலும், அலங்கரிக்கப்பட்டு வெண்ணெய் அலங்காரம் கொண்டும் திகழ்ந்தாள்..

பதிவில் இடம் பெற்றுள்ள படங்களை வழங்கியவர்
கற்பகாம்பிகை ..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


கடந்த ஜூலை 9 அன்று பஞ்சமி.. அன்றைய தினத்தில் ஆயிரம் பேருக்கு மேல் நிவேதனப் பிரசாத அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது..

கனிகளாலும், காய்களாலும் மலர்களாலும் திருக்கோலங்கொண்ட வராஹி அன்னைக்கு இன்று (ஜூலை/14) பூச்சொரிதல் வைபவம்!..

இன்று மாலை - ராஜவீதிகளில் திருவுலா..

நாதஸ்வர மங்கலத்துடன் கூத்தொடு பறையொலி தவிலொலியும் கொண்டு -
சிவகண திருக்கயிலாய மற்றும் செண்டை வாத்திய முழக்கங்களுடன் -
அலங்கார ரதத்தில் எழுந்தருள்கின்றாள்..  


அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள்.
வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள்.

இல்லங்களில் தன தான்ய மழையினைப் பொழிவிப்பவள்.
கொடுமை கொடுவினைகளை வேரோடு அழிப்பவள்.

ஸ்ரீ வராஹி குடியிருக்கும் இல்லத்தை
பஞ்சமும் பிணியும் நெருங்காது..

நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - 
நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்..  

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - 
திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 

நம்பிக்கையுடன் கொடுத்த கடன் - 
எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 

ஆஷாட நவராத்திரி - 2015
ஸ்ரீவராஹியின் திருப்பாதங்களுக்கு 
என்றென்றும் எங்களது நன்றிக்கடன் உரியது.. 

எங்களது நன்றிக்கடன் 
இத்துடன் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல!..

எத்தனை எத்தனையோ பிறவிகளுக்குத் தொடரக்கூடியது!..
தொடர வேண்டும்.. அதுவே எங்கள் தவம்!..

இயன்ற போதிலெல்லாம், வீட்டில் - நெல் அல்லது பச்சைப் பயிறு கொண்டு கோலமிட்டு, நெய் விளக்கேற்றி வைத்து,

தாமரை, ரோஜா, மல்லிகை, முல்லை, வில்வம், மருக்கொழுந்து எனும் நறுமண மலர்களையும் பத்ரங்களையும் சமர்ப்பித்து,

அதிக இனிப்புடன் கூடிய கனிகளையும் பாயசம்,கேசரி, ஜிலேபி போன்ற பட்சணங்களையும் நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுங்கள்..

யான் பெற்ற பேற்றினை 
அனைவரும் பெற வேண்டும்!..

உங்கள் இல்லத்திற்கும்
வரந்தர வராஹி வருவாள்!..
வரங்கள் பல வழங்கி
வளமும் நலமும் தந்திடுவாள்!..

ஆஷாட நவராத்திரி - 2015
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 
-: அபிராம பட்டர் :-

அம்பா சூலதனு கசாங்குஸதரி அர்த்யேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாசுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி..

வரந்தரும் வராஹி வாழ்க.. வாழ்க!..
* * *

10 கருத்துகள்:

  1. வராகியம்மனைப் பற்றிய வரலாற்று செய்திகளையும், ஆன்மீக செய்திகளையும் அறிந்தேன். புகைப்படங்கள் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. விரிவான செய்திகளும், அழகிய புகைப்படங்களும் அருமை ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வராஹி அம்மனைப் பற்றி இவ்வளவு செய்திகளா? இந்த ஆண்டு நன்றாக வழிபட இது மிகவும் உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. விரிவான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வராகி பற்றிய விரிவான விளக்கங்களுடன் கூடிய தகவல்கள் அறிந்தோம் ஐயா.மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..