நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


புதன், அக்டோபர் 18, 2017

இன்பத் தீபாவளி

மகிழ்ச்சியும் நிம்மதியும் 
அனைவருக்கும் ஆகட்டும்.. 

அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!.. 
* * *


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தரும் தான்!..
-: பழம்பாடல் :-


நெற்றிமேல் நிமிர் கண்ணும் நிலாஒளிர் 
பொற்றடம் புயம் நான்கும் பொருந்துறப் 
பெற்றெம்மான் அருளால் பிரம்பு ஒன்றுகைப்
பற்றும் நந்தி பரிவொடு காப்பது!..
-: கந்த புராணம் :-


உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினைவழுவா வண்ணம் அறுமே..(1/10)
-: ஞானசம்பந்தப்பெருமான் :-


தூண்டு சுடரனைய சோதி கண்டாய் 
தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதமெலாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே!..(6/23)  
-: அப்பர் பெருமான் :-


கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன்னிரு பாதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் எது என்அம்மே புவி ஏழையும் பூத்தவளே!..(012)  
-: அபிராமி பட்டர் :-


சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்தது இங்குஎன் தலைமேல் அயன்கையெழுத்தே!..(40) 
-: அருணகிரியார் :-


மாரில் திருவன் வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோத்தும்பீ!.. (1683)
-: திருமங்கையாழ்வார் :- 

ஸ்ரீநாராயணன் - மேல்கோட்டை
கங்கைநீர்பயந்தபாத பங்கயத் தெம்மண்ணலே
அங்கையாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேனுலாவு மென்மலர்
மங்கைமன்னி வாழுமார்ப ஆழிமேய மாயனே!.. (0775)
-: திருமழிசையாழ்வார் :- 


கடைந்தபாற்கடல் கிடந்து காலநேமியைக் கடிந்து
உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்து இராமனாய்
இடைந்தமேழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்தமால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினே!.. (0832)
-: திருமழிசையாழ்வார் :-


அஞ்சனை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர்க் குலத்துதித்த சிலையணி ராமதூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பருக் கென்றும்
அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே!..  
***

ஏர் பிடிக்கின்ற உழவர் முதற்கொண்டு
எல்லை காக்கின்ற வீரர் வரைக்கும்
எல்லாரும் எல்லா நலன்களையும்
பெற்று வாழ்ந்திட வாழ்த்துவோம்!.. 

நாடு வாழ வேண்டும்.. நன்மை எல்லாம் சூழ வேண்டும்..
தேசம் திகழ வேண்டும்.. தீமையெல்லாம் அகல வேண்டும்..

.
மத்தாப்புகளும் வெடிகளும் 
தீபாவளியின் ஒரு அங்கமாகி விட்டன..

ஊடகங்களில் பலரும் பலவிதமான 
கருத்துகளை உபதேசம் செய்து 
கொண்டிருக்கின்றனர்...

தீபாவளி வெடிகளுக்கு
ஒட்டு மொத்தமாக தடை விதிக்க வேண்டும் 
என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்..

எதிர்மறையான கருத்துடையோர்கள்
ஒன்றுகூடிக் கூக்குரலிடுகின்றனர்.. 

இதனால் சுற்றுசூழல் மாசுபடுகின்றது..
சிறார்களும் முதியோர்களும்
வீட்டு விலங்குகளும்
பெருத்த அவதிக்குள்ளாகின்றார்கள்
என்றெல்லாம்!..

எந்தக் காலத்தில் 
சிறார்களும் முதியோர்களும் 
இல்லாமல் இருந்தனர்!..

எந்தக் காலத்தில் 
ஆடு மாடு நாய் பூனை போன்ற சிற்றுயிர்கள் 
மனிதனோடு இல்லாமல் இருந்தன!..

சுற்றுச் சூழலைக் காக்கும் உணர்வு மற்றெவரையும் விட
உண்மையான சைவ வைணவ சமயத்தினருக்கு
மிக அதிகமாகவே உண்டு..

நல்ல சிந்தனையும் செயல்களும்
உற்சாகமும் மகிழ்ச்சியும்
எல்லாரையும் வாழ வைக்க வல்லவை..


இந்நிலையில்,
இயன்றவரைக்கும் நாமும் பாதுகாப்புடன் இருப்போம்.. 
 அனைத்துயிர்களையும் சுற்றுச்சூழலையும் காத்திடுவோம்..

தீமைகளின் அழிவைக் காட்டும்
தீபாவளித் திருநாளை 
மனமகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்..


நாமும் மகிழ்வோம்..
பிறரையும் மகிழ்விப்போம்!.

அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்!..

வாழ்க நலம்..  
* * *  

செவ்வாய், அக்டோபர் 17, 2017

ராமனைத் தேடிய சீதை

வலைப் பதிவர்களை பலவகையிலும்
ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் தளம் எங்கள் Blog.. 

சிறப்பு மிகும் எங்கள் Blog..  தளத்தில்
15/8 அன்று,  பாக்கியம் -  எனும் சிறுகதை வெளியானது..

அதற்குப் பிறகு
காக்கையின் பாட்டு
கண்ணுக்குள் கதை
என, இரண்டு கவிதைகள்...

மேலும் -
நம்ம ஏரியா - தளத்திலும்
அப்பாவின் மகள்
வயலும் வாழ்வும் - என, இரண்டு கதைகள்..

இப்போது மற்றும் ஒரு மகிழ்ச்சியாக
இன்று காலையில் - எங்கள் Blog..  தளத்தில்
சீதை ராமனை மன்னித்தாள் - தொடர் பதிவில்
எனது சிறுகதை வெளியாகியுள்ளது..

வலையுலகின் ஜாம்பவான்கள் பலர் -
சீதை ராமனை மன்னித்த விஷயத்தை வெகு அழகாக எழுதிவிட்டார்கள்...

அவர்களோடு - சின்னஞ்சிறு அணிலாக -
நானும் இதோ களத்தில்!..

நமது தளத்தில் கதையினை வாசித்து கருத்துரையிடும் நண்பர்கள்
எங்கள் Blog..  தளத்திலும் கருத்துரையிட்டு சிறப்பு செய்ய வேண்டுகின்றேன்..

தொடர்ந்து ஊக்கமளிக்கும்
அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்
அன்பின் KG கௌதம் அவர்களுக்கும்
அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றி...

இதோ உங்கள் முன்பாக - கதை..
***

ராமனைத் தேடிய சீதை 
* * * 

திடுக்கிட்டு விழித்த அழகு - அழகேசன் மேலே வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்து கணக்கிட்டார்...

உத்தேசமாக பன்னிரண்டு மணியைத் தாண்டியிருக்கலாம்..

தலைமாட்டுக்கு அருகில் இருந்த சொம்பு தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தார்..

ஒரு வாய் குடித்தார்... அருகிருந்த வெற்றிலையை எடுத்து நீவியபோது -

லோவ்...லோவ்ஹ்!...லோவ்... லோவ்ஹ்!.. - என்றபடி வேலிப்பக்கம் பாய்ந்தது நாய்..

டேய்.. என்னாது?.. - கூவினார்..

வேலிப் படலின் அந்தப் பக்கம் யாரோ நிற்பது போலத் தோன்றியது..

யாரது.. அங்கால.. வேலி ஓரமா?..

நாயின் குரைப்பு அடங்கவில்லை...

மெல்ல நகர்ந்தாற் போலிருந்தது..

யாரது..ன்னு கேக்குறனில்லை?...


அழகு... நாந்தான்.. ராமையா!..

ஏ.. என்ன இந்த நடுச் சாமத்தில.. ஒனக்கும் தூக்கம் வரல்லையா?..- என்றவர், டேய்.. சும்மா குலைக்காம இரு!..  - என்று நாயை அதட்டினார்..

என்ன புரிந்து கொண்டதோ என்னவோ -
நாய் மறுபடியும் வைக்கோல் போருக்குள் முடங்கிக் கொண்டது...

வா... ராமையா.. உக்காரு!.. தண்ணி குடிக்கிறியா?..

கொடு.. கொடு.. ஒரே காந்தலா இருக்கு!.. - என்றவாறு தண்ணீரை வாங்கிக் குடித்தார் - ராமையா...

ராமையா.. உனக்கு உடம்புக்கு ஆகலை..ன்னு கேள்விப்பட்டேன்...

அதெல்லாம் சரியாப் போச்சு...

இப்ப என்ன எழுவது இருக்குமா நமக்கு?..

எழுபத்தொன்னு நடக்குது!...

வயசு ஆகிட்டாலே தொந்தரவு தான்!...

சீக்கு பிணி... நோய் நொடி... இனிமே ஒன்னும் கிடையாது...

டாக்டர் சொன்னாரா!...

டாக்டரு வேற சொல்லணுமாக்கும்!.. நமக்கே தெரியாதா?...

இப்ப வக்கணையா பேசுவே!.. அன்னைக்கு அஞ்சாங்கிளாஸ் படிக்கிறப்ப அம்மைப்பால் ஊசிக்குப் பயந்து வேலிய முறிச்சிக்கிட்டு ஓடினவன் தானே நீ!...

ஆனா.. பாரு!.. பத்து வயசுல அம்மைப்பால் ஊசிக்குப் பயந்தேன்..
பதினெட்டு வயசுல வாள்பட்டரை...ல ஏழடி நீளத்துக்கு வாள் புடிச்சி மரத்தையெல்லாம் சப்பை சப்பையா அறுத்துப் போட்டேன்.. அதெப்படி!.. அதெல்லாம் அந்த அந்த வயசு!..

நீ மட்டுமா!.. நானுந்தானே வந்தேன்!.. ரெண்டு பேரும் தானே வாள்பட்டரை வேலைக்குப் போனோம்... நான் மேல அறுப்பு.. நீ கீழ இழுப்பு!.. அடடா!.. என்னா வேலை.. என்னா வேலை!..

நாள் முழுக்க வாள் அறுப்பு போட்டா இருபத்து நாலணா. - ஒன்னரை ரூபாய் கொடுப்பாரு நல்லமுத்து ஆசாரி... நல்ல மனுசன் இல்லே!..

அந்த மாதிரி மனுசனுங்க எல்லாம் அந்தக் காலத்தோட சரி!..

சற்று நேரம் இருவரிடத்தும் மௌனம்...

எனக்கென்னமோ நம்மால தான் ஆசாரி மனசு உடைஞ்சிட்டாரோ..ன்னு இருக்கும்...

நாம என்னா தப்பு செஞ்சோம்.. அழகு?...

ஒரு தப்பும் செய்யலை தான்!.. ஆனா ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!...

என்னா..ன்னு சொல்றது.. எப்படிச் சொல்றது?.. அதைச் சொல்றதுக்கான காலமா அது?.. சொல்லியிருந்தா நம்மளை உசுரோட விட்டுருப்பானுங்களா நம்ம ஆளுங்க?..

நம்ம பிரச்னையை விடு.. அந்தப் புள்ளைய.. சும்மா விட்டுருப்பானுங்களா?...

மீண்டும் அவர்களிடத்தில் மௌனம்...

அந்த வேளையில் இருவரது நினைவிலும் வந்தவள் - பொன்னரும்பு..

நல்லமுத்து ஆசாரியாரின் செல்ல மகள்..

இவர்களை விட ஒரு வயதே இளையவள்...

அழகு.. என்றால் அழகு.. அப்படியொரு அழகு.. கடைந்தெடுத்த சிற்பம் போல!.. நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

உச்சி வேளையில் கலயத்தில் அப்பனுக்கும் அறுப்புப் பட்டரை ஆட்களாகிய ராமையனுக்கும் அழகேசனுக்கும் கஞ்சி கொண்டு வருவாள்...

நாரத்தங்காய் ஊறுகாய்... நெனைச்சாலே வாய் ஊறும்!..

எருமைத் தயிர்..ல கரைச்ச பழைய சோறு .. சுட்ட கருவாடு..
இல்லேன்னா.. வறுத்து அரைச்ச மிளகாய் துவையல்..

அப்போதெல்லாம் முழுத் தேங்காயே ஒரு அணா தான்..
ஆனாலும், தேங்காய் எல்லாம் நல்ல நாள் பெரிய நாளைக்குத் தான்...

பனை ஓலைல மடக்கு செஞ்சி ஆளாளுக்கு ஒன்னு கையில கொடுத்துட்டு
அந்தப் பழைய சோத்தை மறுபடியும் நல்லா பிசைஞ்சு கையால அள்ளி ஓலை மடக்கு...ல வைப்பாள்...

சோறு எடுத்து வைக்க அகப்பை இருந்தாலும்
கையால் அள்ளி வைப்பதில் தான் அவளுக்கு சந்தோஷம்..

தளரத் தளர தயிர்சோறும்... முளைக்கீரையும்...
வெயில் நேரத்துக்குக் குளுகுளு..ன்னு இருக்கும்....

யம்மாடி.. சாப்பிடியாடி.. தங்கம்?.. நீயும் ரெண்டு வாய் சாப்பிடும்மா...
எஞ் சீத்தாலச்சுமி!.. - பாசம் மேலிடக் கொஞ்சுவார் நல்லமுத்து..

பொன்னரும்பு..ன்னு பேரு.. ஆனா கூப்பிடுறதெல்லாம் சீத்தாலச்சுமி!...

ஆச்சு.. அவளுக்கும் கல்யாணம் முடிக்கிற வயசு தான்... தாயில்லாம வளர்ந்துட்டா!... நல்லவனா மாப்பிள்ளை கிடைக்கணுமே!... - என்று தவித்துக் கொண்டிருந்த போது தான் இவர்கள் இரண்டு பேரும் வேலைக்கு வந்தார்கள்...

கஞ்சி கொண்டு வந்த வேளையில் ஒருநாள் பொன்னரும்பும் ராமையனும் கண்களால் கலந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்...

இது எங்கே போயி முடியுமோ..தெரியலையே!...

சீத்தாலச்சுமிக்கும் ராமையனைப் பார்க்கிறதுன்னா கொள்ளை ஆசை...

இது அழகேசனுக்கும் சாடை மாடையா தெரியும்...

பையன் கெட்டிக்காரன்.. பொழச்சுக்குவான்.. இருந்தாலும் வாயத் திறந்து கேக்க வேணாமா?.. - நல்லமுத்து ஆசாரி மருகினார்...

மகளைக் கோவிச்சுக்கிறதா?.. தாயில்லாப் புள்ளை... திடுக்...ன்னு அழுதுட்டா.. எம்மனசு சல்லி சல்லியா ஒடைஞ்சி போகுமே... பெத்தவ இருந்தா பொறுப்பா கேட்டு சொல்லுவா!.. நான்.. என்ன பண்ணுவேன்!... - மனம் தடுமாறினார்...

அன்னைக்கு ராத்திரி..
குடிசை வாசல்ல ஓலைப் பாயில படுத்துக் கிடந்தார் நல்லமுத்து -

சீத்தாலச்சுமியும் தூங்கவில்லை...
பசுஞ்சாணம் இட்டு மெழுகிய திண்ணையில் புரண்டு கொண்டிருந்தாள்..

யம்மாடி.. சீத்தா.. சீத்தாலச்சுமி!..

ம்.. என்னப்பா?..

இங்க வாயேண்டி செல்லம்!.. காலெல்லாம் நோகுதுடா...
அந்த தைலத்தைக் கொஞ்சம் தேய்ச்சி விடேன்!...

காய்ச்சிக் கொண்டாரவா.. அப்பா?..

அதெல்லாம் வேண்டாம்.. சும்மாவே தேய்ச்சி விடுடா!...

தைலத்தை எடுத்து வந்து அப்பனின் கால்களில் தேய்த்து
- இதமாக அழுத்தி விட்டாள்...

மகளின் மீது பாசம் மிகுந்து வர - மளுக்...கென நல்லமுத்து விசும்பினார்...

அப்பா... என்னது.. ஏன் அழுவுறீங்க?.. - சீத்தாலச்சுமி திகைத்தாள்..

இன்னும் எத்தனை நாளைக்கோ எம் பொழப்பு...
ஒன்னை ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுத்திட்டா நல்லா இருக்கும்!...

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நான் உங்க கூடவே இருக்கேன்..

அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ராசாத்தி..
ஊரு ஒலகம் என்ன சொல்லும்?...

..... ..... .....

அப்பன் இப்படிக் கேக்கிறானே..ன்னு தப்பா நெனைக்காதே...ம்மா!.. வாள் பட்டரைக்கு வருதே ராமையன்... மனசுக்குப் புடிச்சிருக்கா!..

அதெல்லாம் ஒன்னுமில்லை...

நீ சொல்லாட்டாலும் அப்பனுக்குத் தெரியாதா... ம்மா?...

அதெல்லாம் வேண்டாம்..ப்பா.... அவங்கள்ளாம் பணக்காரங்க!..

ராமையனோட அப்பாரு காந்தி கட்சி... நல்லவரு.. பெரிய மனசு...

உங்க இஷ்டம்.. - விருட்.. என எழுந்து உள்ளே போனாள் சீத்தாலச்சுமி...

நமக்கு உறவுமுறை இல்லே... இருந்தாலும்,
விடிஞ்சதும் போய்ப் பேசுவோம்.. தைரியம் கொடுடி.. மகமாயி!...

வானத்தில் நட்சத்திரங்கள் இடம் மாறியிருந்தன..

விடியலில் விழித்தெழுந்த நல்லமுத்து
எதிரில் ராமையனின் தந்தை வருவதைக் கண்டார்...

வாங்க ஐயா.. விடியல்..ல என்ன அவசரம்.. சேதி சொன்னா வந்திருப்பனே!..

நல்லமுத்து.. நாளன்னைக்கு நம்ம வீட்டு...ல விசேசம்.. ராமையனுக்கு எங்க அக்கா மகளைக் கட்டுறதுன்னு!... பந்தக்கால் நாட்டணும்.. நீ தான்.. முன்னால நின்னு எல்லாம் செய்யனும் .. உம் மகளை அழைச்சுக்கிட்டு வந்துடு!..

குடிசைக்குள் சீத்தாலச்சுமியின் விசும்பல்...
நல்லமுத்துவின் கண்களில் நீர் வழிந்தது...

அன்றைக்கு சாயங்காலமாக நல்லமுத்து உரல் ஒன்றை செதுக்கிக் கொண்டிருக்க அருகே பட்டைகளை அள்ளிக் கொண்டிருந்தாள் சீத்தாலச்சுமி..

ராமையனும் அழகேசனும் ஒன்றாக வந்தனர்..

ஆசாரியாரே.. அப்பா சொல்லியிருப்பாங்க.. இனிமே வேலைக்கு வர்றதுக்கு தோதுப்படாது.. குற்றங்குறை செஞ்சிருந்தா மன்னிச்சுக்கணும்!...

நல்லாயிருப்பீங்க.. தம்பீ.. நல்லாயிருப்பீங்க!..

மெல்ல நிமிர்ந்தான் ராமையன்...


மருத மரத்தின் மறைவில் சீத்தாலச்சுமி..

அவள் கண்களில் கண்ணீர்..

இப்பவாவது ஒரு வார்த்தை சொல்லேன்!.. - கண்ணீர்த் துளிகள் கெஞ்சின..

ராமையனுக்கு நெஞ்சில் உரம் இல்லாமல் போனது..

அடுத்த சில மாதங்களில் சீத்தாலச்சுமிக்கும் கல்யாணம் கூடிவந்தது..

நம்ம குடியானவன் வீட்டு கல்யாணம் என்று ஊரே கூடி வாழ்த்தியது..

வீட்டுக்கு வீடு சீர் வரிசை வைத்தார்கள்... கல்யாணம் முடிந்த கையோடு மாமனாரையும் அழைத்துக் கொண்டு போனான் மாப்பிள்ளை...

வெயிலும் மழையுமாய் காலம் வெகு வேகமாக ஓடிப்போனது..

தொண்டையைக் கனைத்துக் கொண்டார் அழகு..

அதுக்கு அப்பறம் சீத்தாலச்சுமி..ய பார்த்தியா நீ!..

மாயவரம் பஸ்டாண்டுல ஒரு தரம்.... ஆனா, அவ என்னை கவனிக்கலை...
எம் மனசு உடைஞ்சு போச்சி அழகு.. அந்த ஏழை மனசு என்ன நெனைச்சதோ?.. நேருக்கு நேர் பார்க்கிற தைரியம் வரலையே!..

ஒரு தரம் மட்டையில சோறு அள்ளி வைக்கிறப்ப - போதும்! ..ன்னு நான் கையை நீட்டினேன்.. அவசரத்துல அவ கையோட என் கை பட்டுக்கிச்சு... அதுக்கே மூனு நாள் தூங்காமக் கிடந்தேன்...

அதுக்கு அப்புறம் ஒருதரம் கோடாலி கால்..ல விழுந்தப்ப தாவணியக் கிழிச்சு கட்டி விட்டா... என் காலைத் தொட்டவளை நான் கை தூக்கி விடலையே...ந்னு மனசு நோகுது...

அன்னைக்கு இருந்த காலக்கட்டத்தில கன்னிப் பொண்ணுங்களப் பார்க்கிறதே பெரிய விஷயம்!... அதுவும் உங்க வசதிக்கும் அவங்க இருந்த நிலைமைக்கும்!..

என்ன பணமோ.. என்ன கௌரவமோ?.. கடைசியில என்னத்துக்கு ஆகும்?.. போற உசிரை புடிச்சு நிறுத்துமா?...

அழகு!.. எம்மேல அவ ஆசை வெச்சிருக்கா... ன்னு தெரிஞ்சும் அவ கூட ஒரு வார்த்தை கூட பேசாம வந்தேனே!... அவ மனசு எப்படி துடிச்சதோ?.. அந்தப் பாவம் சும்மா விடுங்...கிறே!...

நீ.. உங்க வீட்டுல ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்..

அப்பாருகிட்டே சொன்னா.. என்னைய இழுத்துப் போட்டு ஒதைக்கிறதும் இல்லாம -
ஆசாரியார் வீட்டுக்குப் போயி அங்கேயும் கலாட்டா செய்வாங்க..ன்னு நான் பயந்திட்டேன்...

எம் மாமன் வகையறாவோ - மகா முரடனுங்க!..
ஏழைய இந்த ஊரு அம்பலத்தில ஏத்தாது... நான் என்னடா செய்வேன்!...
எல்லாத்தையும் மறந்துட்டதா ஒரு பொழப்பு...
அதுக்காக இவளுக்கு எந்த குறையும் வைச்சதில்லை...

ஆலா குருவி மாதிரி அப்பப்போ சீத்தாலச்சுமியோட நினைப்பு மனசு ஓரமா வரும்... தொண்டைக் குழியை கப்புன்னு அடைச்சிக்கும்...
இனிமே எந்த பிரச்னையும் இல்லை...

சீத்தாலச்சுமி என்னை மன்னிச்சிருப்பாளா?... ன்னு தவிச்சிக் கிடந்தேன்...
அன்னைக்கு அவ வந்தா.. பதினெட்டு வயசுல பார்த்த மாதிரியே வந்தா!...

என்னது.. சீத்தாலச்சுமி வந்தாளா?.. என்னா சொல்றே!..

அதெல்லாம் சொன்ன உனக்கு வெளங்காது அழகு!..

சீத்தாலச்சுமி ஏன் வந்தா?.. எதுக்கு வந்தா?..
என்னை மன்னிச்சிட்டதால அவ வந்தா!...
என் நிலமை அவளுக்குப் புரியாமலா இருந்திருக்கும்?...
அவளப் பார்த்ததும் என் கண்ணு கலங்கிப் போச்சு!...

அப்படியே ஆதரவா நெஞ்சோட அணைச்சுக்கிட்டா...
கண்ணைத் தொடச்சி விட்டுட்டு - வாங்க போவோம் ..ன்னா!..

நீ முன்னால போ.. பின்னாலேயே வாரேன்..ன்னு கிளம்பிட்டேன்!..

ஏ.. ராமையா!.. இந்த இருட்டுக்குள்ள எங்கே கிளம்பிட்டே!..

இனி இருட்டு ஏது?.. அதான் மன்னிச்சிட்டாளே!...
ராமையனை சீத்தாலச்சுமி மன்னிச்சிட்டாளே!..

தெருவில் ஏதோ ஒரு வாகனம் புழுதியைக் கிளப்பி விட்டுச் சென்றது..

சுளுக்கென.. வேலிப் படல் திறக்கின்ற சத்தம்...

குணுக்..குணுக்.. - என்றபடி நாய் ஓடி வந்து -
வாலைக் குழைத்துக் கொண்டு குதித்தது..

அழகேசன் திரும்பிப் பார்க்க - அங்கே அவரது மகன்..

தூங்காம என்னப்பா செஞ்சிக்கிட்டு இருக்கீங்க!..

நம்ம மாடி வீட்டு ராமையன் வந்தான்..
பேசிக்கிட்டு இருந்தோம்.. ராமையா?..

திரும்பினார் அழகேசன்.. அங்கே ராமையனைக் காணவில்லை...

என்னது?.. ராமையா வந்திருந்தாரா?..
அப்பா!.. ஏதாவது கனா கண்டீங்களா?..

கனா கண்டேனா?.. அவன் தானே வந்திருந்தான்...

அவரு இன்னிக்கு சாயங்காலம் தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில காலமாகிட்டார்... அந்திப்பட்ட நேரத்தில கொண்டு வரவேணாம்..ன்னு - இப்போ தான் வீட்டுக்கு எடுத்து வந்திருக்காங்க...

பொழுது விடிஞ்சதும் போய் விசாரிச்சுட்டு வாங்க!..
உங்க சின்ன வயசு கூட்டாளி...  உடனே சொல்ல வேணாம்..ன்னு நினைச்சேன்.. நீங்க என்ன..ன்னா அவரு வந்து பேசிக்கிட்டு இருந்தார்...ங்கிறீங்க!..

நெசந்தான்... சீத்தாலச்சுமி ராமையனை மன்னிச்சுட்டா!..

அழகேசன் தனக்குள் சொல்லிக் கொண்டார்....

என்னப்பா!.. எதும் சொன்னீங்களா?..

இல்லேப்பா... ஒன்னும் இல்லை...
கையைக் காலைக் கழுவிட்டு வீட்டுக்குள்ள போ...
அந்தப் புள்ளை தனியா தூங்குது!..

சரி.. மனசு பதறாம தூங்குங்க...
நான் வேணா கூட இருக்கவா?.. - மகன் ஆதரவாகக் கேட்டான்...

வேண்டாம்.. நீ உள்ளே போய்த் தூங்கு..

மகன் வீட்டினுள் சென்று விட்டான்...

மெல்ல கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார்..

நானுந்தான் அரும்பு மேல ஆசை வெச்சிருந்தேன்...
ஒரு வார்த்தை நானாவது சொல்லியிருக்கலாம்...
ஆனா அரும்பு என்னய ஏறெடுத்து பார்த்ததில்லையே..

ஆசையும் பாசமும் ராமையனோட கலந்திருக்கும் போல...
அதான் கூடவே வந்து அழைச்சிக்கிட்டுப் போய்ட்டா!..
எங்கேயாவது பொறந்து நல்லா இருக்கட்டும்!..

ராமையனுக்கு இனிமே சந்தோஷந்தான்... ஏன்னா...
சீத்தாலச்சுமி ராமையனை மன்னிச்சுட்டா!...

முணுமுணுத்துக் கொண்டே அழகேசன் கட்டிலில் சாய்ந்தார்..

மேற்கே நட்சத்திரங்கள் இறங்கியிருக்க -
கீழ் வானில் வெள்ளி முளைத்திருந்தது...

***

ஞாயிறு, அக்டோபர் 15, 2017

நல்வாழ்த்துகள்..

அக்கா.. அக்காவ்!..

வாம்மா.. தாமரை.. வா.. எப்படியிருக்கே?..நல்லாயிருக்கேன்.. அக்கா!.. மாமாவுக்குத் தான் ரெண்டு நாளா ஜூரம்.. நல்லவேளை சாதாரண காய்ச்சல் தான்!..

என்னமோ..ம்மா.. எல்லாரும் நல்லபடியா இருக்கணும்... வீட்டுக்கு வீடு கஷ்டம்.. வருத்தம்...சோதனை .. ன்னா மனசு ரொம்பவும் கஷ்டப்படுது...

அக்கா.. நேத்து கூட டெங்கு காய்ச்சல்..ல இருந்து தப்பிக்கிறதுக்கு பொது சுகாதார வழிமுறைகள்..ன்னு ஒரு கையேடு கொடுத்துருக்காங்க.. பக்கத்து வீட்டுப் பையன் வாங்கி வந்திருந்தான்.. கூடவே நிலவேம்பு பொடியும் கொடுத்தாங்களாம்..யாரு கொடுத்தாங்களாம்!..

ஏதோ சிவனடியார் திருக்கூட்டம்..ன்னு போட்டிருந்தது.. அத்தோட அப்பர் பாடுனது.. அவரு பாடுனது.. இவரு பாடுனது..ன்னு தேவாரப் பாட்டு எல்லாம் அச்சடிச்சு கொடுத்திருக்காங்க... இதப் பாடினா ஜூரம் ஓடிப் போய்டும்..ன்னு வேற சொல்லியிருக்காங்க...

நல்லது தானே!..

என்னா நல்லது?.. ஊர் தீப்புடிச்சி எரிஞ்சப்போ யாரோ ஒரு ராஜா தில்லானா வாசிச்சானாம்.. அந்த மாதிரி.. எங்கே பார்த்தாலும் கொடுமையா விஷக் காய்ச்சல் ஜூரம் ..ன்னு இருக்கிறப்போ தேவாரம் பாடுங்க... திருநீறு பூசுங்க..ன்னா என்னக்கா அர்த்தம்.. முட்டாள் தனமா இருக்கா.. இல்லையா!...

இதுல.. என்னம்மா முட்டாள் தனம் இருக்கு?..

ஜூரம் வந்துட்டா கோயிலுக்குப் போறதா?.. டாக்டர்..கிட்ட போறதா?..

கோயிலுக்குப் போறது மனசு நல்லாயிருக்கணும் ..ங்கறதுக்கு..
ஆஸ்பத்திரிக்குப் போறது உடம்பு நல்லாயிருக்கணும் ..ங்கறதுக்கு...

அந்த டாக்டர்களே தெய்வத்தை நம்புறப்போ -
நாம தெய்வத்துக்கிட்ட நம்பிக்கை வைக்கிறதுல என்ன தப்பு?..


அதுக்காக வியாதி எல்லாம் கோயிலுக்குப் போறதுனாலயும் தேவாரம் பாடுறதுனாலயும் விலகிப் போகும்...ன்னு சொன்னால்..

அலைச்சல் மிச்சம்.. உளைச்சல் மிச்சம்...

என்னக்கா... எதுகை மோனையா?..

இல்லடா.. தாமரை.. இன்றைக்கு மருத்துவம் என்ன நிலைல இருக்கு..ன்னு நான் சொல்லி நீ தெரிஞ்சிக்க வேண்டியதில்லை.. சமீபத்தில தவறான சிகிச்சையால கர்ப்பிணி ஒருத்திக்கு கரு கலைஞ்சதோட அதிக வீரியமான மருந்தினால குடல் பகுதியும் அழுகிப் போனதாக செய்தியெல்லாம் வந்ததே!..

அதனால???..

கோயிலுக்குப் போகணும்..ன்னு சிரத்தையா இருக்கிறவங்க தன்னை சுத்தமா வெச்சுக்குவாங்க... தன்னுடைய இருப்பிடத்தை சுத்தமா வெச்சுக்குவாங்க...

அதுக்கும் இதுக்கும் என்னக்கா சம்பந்தம்!?..

இருக்குதே!..

என்ன அது?...

ஆறு குளம் குட்டை - இதெல்லாத்தையும் அழிக்க மாட்டாங்க.. இயற்கையை காப்பாத்துறதுல ஆர்வமா இருப்பாங்க!.. 
நீ தட்டான் பூச்சி பார்த்திருக்கியா!..

ஓ!..அந்தத் தட்டான் ஒரு நாளைக்கு பல நூறு கொசுக்களை குளங்குட்டைகள்..ல ஒழிச்சுக் கட்டிடுதாம்.. கொசு முட்டையிட்டா அதுகளையெல்லாம் அந்தத் தண்ணியில கிடக்கிற தவளைகள் தின்னு தீர்த்துடுதாம்...

அட!..

என்ன ஆச்சர்யமா இருக்கா!.. ஈக்குருவி...ன்னு ஒன்னு.. கோடியக்கரை பட்டுக்கோட்டை பக்கமெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.. 


Fly Catcher
ஆனா அதுங்க.. இப்போ இல்லை.. சிட்டுக் குருவிய மாதிரி.. காணாமப் போயிடுச்சுங்க!..

அதென்ன அக்கா ஈக்குருவி?..

Fly Catcher.. ன்னு ஆங்கிலப் பெயர்.. ஈ கொசு மாதிரியான சின்ன சின்ன பூச்சிகளைக் காலி பண்றது தான் இதுங்களுக்கு வேலை...


Fly Catcher - India
கரிச்சாங்குருவி மாதிரி .. ஆனா செந்தூர நிறமா இருக்கும்.. வால் நீளமா இருக்கும்... அப்போ இதுங்களைப் பற்றி அதிகமா தெரியலை.. இப்போ கூகிள் வழியா தெரிஞ்சுகிட்டேன்.. வட இந்தியாவுல பலவகையா நெறைய இருக்குதாம்.. மத்தியப் பிரதேசத்தின் மாநிலப் பறவையாம் இது.. இலங்கையிலும் காணப்படுதாம் இந்தப் பறவை..

இந்த சேதியெல்லாம் எனக்கு புதுசு அக்கா!..

இந்தப் பறவைகளுக்கு மரங்கள் அடர்த்தியான பகுதி தான் வாழ்விடங்கள்.. ஆனா நமக்குத் தான் மரங்களைக் கண்டாலே பிடிக்காதே...

..... ..... ..... .....!..

இயற்கையில ஒன்னுக்கொன்னு தொடர்பிருக்கு.. அதை மனித சமூகம் தான் உடைச்சது... அதனோட பலனைத் தான் இப்போ அனுபவிக்கிறது..

பக்தியினால மனம் சுத்தமானது.. சுற்றுச் சூழல் பத்திரமானது.. எங்காவது ஒரு சில தவறு நடந்திருக்கலாம்... அதுக்காக கோயிலாவது குளமாவது.. ன்னு குற்றம் சொல்லக் கூடாது...

பகுத்தறிவு ..ன்னு வந்ததுக்கு அப்புறம் தான் ஆறு குளம் காடு மலை எல்லாமே காணாமப் போனது!..

நம்ம மக்களையும் சும்மா சொல்லக் கூடாது.. 
கோயிலுக்குப் போனா அங்கே அசுத்தம் பண்றது தான் முதல் வேலை..

கோயில் குளத்து...ல ஈரத்துணிகளை போட்டு வர்றது... 
கொய்யாப் பழத்துல விளக்கேத்துறேன்.. கொடுக்காப் புளியில விளக்கேத்துறேன்... ன்னு சுற்றுப் புறத்தைக் கெடுக்கிறது...

கோயில்..ல உட்கார்ந்து கண்டதையும் தின்னுட்டு அங்கேயே போட்டுட்டு வர்றது..

இப்படியெல்லாம் பண்றதுனாலே மத்தவங்களுக்கும் இடைஞ்சல்...ங்கறதை கொஞ்சமும் உணர்ந்துகிறதே இல்லை...

வீட்டு வாசல்..ல முருங்கை மரம்.. அது பக்கத்து வீட்டுப் பக்கம் வளைஞ்சா சண்டை வராது.. ஏன்னா - முருங்கைக் காய்!.. ஆனா, அதுவே வேப்ப மரமா இருந்தா சண்டை..  உடனே மரத்தை வெட்டுங்க.. இலை எல்லாம் விழுந்து ஒரே குப்பை.. ன்னு!...

..... ..... ..... .....!..

ஆனா வேப்பஞ்சருகுகளை கொளுத்தி விட்டா அந்தப் புகையில கொசு ஈ எல்லாம் ஒழிஞ்சு போகுது... வேப்ப மரங்களே காணாமப் போன பிறகு வேப்பஞ்சருகுக்கு எங்கே போறது!..

வீடுகள்..ல முன்னெல்லாம் சாம்பிராணி குங்கிலிய தூபம் போடுவாங்க!.. நெருப்புக் கங்குல தக.. தக..ன்னு புகை.. கொசு மட்டுமல்ல பல்லி கூட ஓடிப் போகும்.. இப்போ கம்பியூட்டர் சாம்பிராணி..ன்னு.. ஏதோ ஒன்னு... அதனால என்ன பிரயோஜனம்?.. யாருக்கும் தெரியாது!..

இப்படியெல்லாம் இருக்குதா அக்கா!..

இல்லையா பின்னே!.. ஜனங்க பக்கந்தான் இப்படி..ன்னா முனிசிபாலிட்டி என்ன செய்யுது?.. எந்த ஒரு ஊராவது சுத்தமா இருக்கிறதா விரல் விட்டு சொல்லு.. பார்ப்போம்!..

அது முடியாது அக்கா!..

எந்த ஊருக்கும் போய் இறங்கு.. அந்த ஊர் பஸ் ஸ்டாண்டு எப்படி இருக்கு?.. வேற ஊர்களை ஏன் சொல்வானேன்!.. நம்ம தஞ்சாவூரை எடுத்துக்க!.. சொல்ற மாதிரி இருக்குதா!.. பல லட்சம் செலவு..ன்னு கணக்கு காட்டுறாங்க.. நாலு மாசத்தில இலவச கழிப்பிடம் பாழாய்ப் போய்க் கிடக்குது.. வழி நெடுக குப்பை கூளம்.. துர்நாற்றம்.. திருந்தாத ஜனங்கள்.. அரசு வேலையாட்கள்...

இதையெல்லாம் ஒட்டு மொத்தமா திருத்துறதுக்கு எத்தனை காலம் ஆகுமோ.. யாருக்கும் தெரியாது.. யாராலயும் முடியாது..ன்னும் வெச்சுக்கயேன்...

அதனால தான் நம்மள.. நாமே திருத்திக்கலாம்..ன்னு சொல்றீங்களா!..

ஆமாம்..  
அதுக்காக ஆஸ்பத்திரிகெல்லாம் போக வேண்டாம்..ன்னு யாரையும் சொல்லலை... 
நமக்கு நாமே சுத்தம் சுகாதாரத்தைப் பேணிக்குவோம்..
முடிஞ்சவரைக்கும் நோய் நொடிக்கு இடங்கொடுக்காம இருப்போம்..

நம்ம முயற்சி எல்லாம் பலிக்கணும்..ன்னு
தெய்வத்தையும் கூட துணைக்கு அழைச்சுக்குவோம்!.

ஓஹோ.. அதுக்குத் தானா தேவாரம் திவ்ய பிரபந்தம் எல்லாம்!...

ஆமாம்..மா.. 
எங்கள் Blog.. ன்னு ஒரு வலைத்தளம்.. ஸ்ரீராம் நடத்துறார்..வாராவாரம் சனிக்கிழமை ஊருக்கு நல்லது செய்ற 
நல்லவங்களைப் பற்றி எழுதறார்...

தன்னலமில்லாத அவங்க எல்லாம்
கடவுளை வேண்டிக்கிட்டா கூட நல்லது நடக்குமே.. 
மனுசங்களை நம்புறதை விட தெய்வத்தை நம்புவோமே...

மருந்தெல்லாம் நலம் கொடுக்குமா.. கெடுக்குமா.. தெரியலை...
இன்னைக்கு உணவே விஷம்.. ந்னு சொல்லிட்டாங்க..
அப்படியிருக்க.. மருந்து மட்டும் அமுதம் ஆகிடுமா!..

அதனால தான் சொன்னேன் -
அவனது அடியலால் ஈங்கில்லை பிறிதொரு தஞ்சம்!.. - அப்படி..ன்னு!..

நம்பிக்கை .. அதுதான் மருந்து...
அதைத்தான் இறையருளா எடுத்துக்கறோம்...

எப்படியோ அக்கா.. நல்லது நடக்கணும்..
அதுக்காக வேண்டிக்குவோம்!..
எங்கே...க்கா அத்தானும் பசங்களும்?..

அங்கே அரண்மனை வளாகத்துல
சித்த மருத்துவம் பற்றி பயிற்சிப் பட்டறையாம்.. போயிருக்காங்க...

அப்புறம் அக்கா!..
தீபாவளி விசேஷமெல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு!.

எல்லாருக்கும் துணிமணியெல்லாம் எடுத்தாச்சு...
பலகாரம் செய்யிறது மட்டும் தான் பாக்கி!..

ஆமாம்.. அக்கா.. எங்க வீட்லயும் துணி எடுத்தாச்சு...
இந்தத் தீபாவளிக்கு புதுசா ஒரு இனிப்பு செய்யப் போறேன்!..

அப்படியா!.. என்னம்மா அது?..

அதை தீபாவளி முடிஞ்சதும் சொல்றேனே!..

தீபாவளிக்கு பட்டாசெல்லாம் பாதுகாப்பா வெடிக்கணும்.. சரியா!..ஆகட்டும் அக்கா!.. எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!..

ஆகட்டும்..டா.. செல்லம்.. 
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!..

வாழ்க நலம்..
வாழ்க வளம்!..
***

சனி, அக்டோபர் 14, 2017

சொல்மாலை 4

இன்று புரட்டாசி மாதத்தின் 
நான்காம் சனிக்கிழமை..

இன்றைய பதிவில்
பேயாழ்வார் அருளிச் செய்த
திருப்பாசுரங்கள் திகழ்கின்றன..திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பாலின்று..(2282)

மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தந்துழாய் மார்பன் சினத்துச்
செருநர் உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து..(2284)நாமம் பலசொல்லி நாராயணா என்று
நாமனக்கை யால்தொழுதும் நன்னெஞ்சே வாமருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண்துழாய்
கண்ணனையே காண்க நங்கண்..(2289)

வாய் மொழிந்து வாமனனாய் மாவலியால் மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சா திருக்க அருள்..(2299)


பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான் தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு..(2302)

வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்கு தீநீருருவும் ஆனான் பொருந்தும் சுடராழி
ஒன்றுடையான் சூழ்கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது..(2305)

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்
நூற்கடலும் நுண்ணுல தாமரைமேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபாலகன்..(2313)


கைய கனலாழி கார்க்கடல் வாய் வெண்சங்கம்
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள் செய்ய
படைபரவ பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயன் அவற்கு..(2317)

தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவம்
தானே தவவுருவும் தாரகையும் தானே
எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத்து
இருசுடரும் ஆய இறை..(2319)


இறையாய் நிலனாகி எண்திசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய் பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்..(2320)

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்ணெடுங்கத் தானளந்த மன்..(2321)
நாடு நலம் பெறுதற்கு 
நாராயணன் திருவடிகள் காப்பு

ஓம் ஹரி ஓம் 
* * *

புதன், அக்டோபர் 11, 2017

நலமே சேர்க..

அவனது அடியலால் ஈங்கில்லை பிறிதொரு தஞ்சம்!..

தமிழகத்தில் டெங்கு எனும் காய்ச்சல் பரவியிருக்கின்றது..
நாளுக்குநாள் அதிகரித்து வருவது அச்சத்தை ஊட்டுகின்றது.. 

மக்களின் பிழையா.. ஆட்சி செய்வோரின் பிழையா?.

விவாதங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன..
விடை தான் இன்னும் கிடைத்தபாடில்லை..
.
இந்த விஷக்காய்ச்சலால் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன..
அனைத்து தரப்பினரும் பரிதவித்து நிற்கின்றனர்.. 

இவ்வேளையில் மாநிலத்தின் நோய் நீங்கவேண்டும்..
அனைவரும் நோயின் பிடியிலிருந்து விடுபடவேண்டும்..
அத்துடன் எல்லாரும் பூரண நலம் பெறவேண்டும்!..

- என்ற, பிரார்த்தனையுடன் சிறப்பானதொரு சிவாலய தரிசனம் இன்று..

அத்துடன் -
விஷம் விஷக் காய்ச்சல் இவற்றினால் ஏற்படும்
தீங்கினை மாற்றியருளும் திருப்பதிகமும் இன்றைய பதிவில்....

திருத்தலம் - திங்களூர்

ஸ்ரீ கயிலாய நாதர் 
ஸ்ரீ பெரியநாயகி அம்மன்
இறைவன் - ஸ்ரீ கயிலாய நாதர்
அம்பிகை - ஸ்ரீ பிரஹன்நாயகி, பெரியநாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்..

திருவாக்கு அருளியோர்
திருநாவுக்கரசர், சுந்தரர்

- திருத்தலச் சிறப்புகள் -
சந்திரன் தன் குறை தீர தொழுது வணங்கிய திருத்தலம்..

பங்குனி உத்திர நாளில் காலையில் சூரியனும் 
பங்குனி நிறை நாளின் மாலையில் சந்திரனும்
கருவறையில் கதிர் பரப்பி வழிபடும் திருத்தலம்..

விடம் தீண்டி இறந்த சிறுவனை திருநாவுக்கரசர் 
மீண்டும் எழுப்பிய திருத்தலமும் - இதுதான்..

முகம் கண்டு அறியாமலேயே அப்பர் ஸ்வாமிகளின் மீது வாஞ்சை கொண்டு தன் பிள்ளைகளுக்கு பெரிய திருநாவுக்கரசு இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட்டு அப்பர் ஸ்வாமிகளின் பெயராலேயே பற்பல அறங்களைச் செய்து வந்தவர் - அப்பூதி அடிகள்...

நாளும் கோளும் கூடி வந்த வேளையில்- அப்பூதி அடிகளைத் தேடி வந்து சந்தித்தார் - அப்பர் ஸ்வாமிகள்..

அகமகிழ்ந்த அப்பூதி அடிகள் அன்புடன் அவருக்கு விருந்தளிக்க விழைந்தார்..

விருந்திற்காக வாழை இலை அரிந்த அவரது மகனை நாகம் தீண்டியது...
கடும் விஷத்தால் பாலகனின் உயிர் பறிபோனது..

அந்த துயரத்தை மறைத்து - அப்பர் ஸ்வாமிகளுக்கு விருந்தளிக்க முனைந்தனர் - அப்பூதியடிகளும் அவருடைய இல்லத்தரசியும்..

உண்மையை உணர்ந்த ஸ்வாமிகள் மனம் பதறியவராக -
திருப்பதிகம் பாடி - இறந்த மகன் மீண்டும் உயிர் பெற்று எழுமாறு செய்தார்..

அந்த அருஞ்செயல் நிகழ்ந்தது - திங்களூர் திருத்தலத்தில்...

அப்பர் ஸ்வாமிகள் அருளிய திருப்பதிகம் -
விடந்தீர்த்த திருப்பதிகம் எனப் புகழப்படுகின்றது...

இத்திருப்பதிகத்தினை 
முறையாகப் பாராயணம் செய்வோரை
விஷப் பூச்சிகளும் அவற்றால் 
நேரும் கொடிய நோய்களும் அணுகா..
- என்பது இறையன்பர்களின் நம்பிக்கை...


நான்காம் திருமுறை
திருப்பதிக எண் - 18

விடந்தீர்த்த திருப்பதிகம்..

ஒன்று கொலாம்அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும்மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடுவெண்டலை கையது
ஒன்று கொலாம் அவர்ஊர்வது தானே.. 

இரண்டு கொலாம் இமையோர் தொழுபாதம்
இரண்டு கொலாம் இலங்குங்குழை பெண்ணாண்
இரண்டு கொலாம் உருவம் சிறு மான்மழு
இரண்டு கொலாம் அவர் எய்தின தாமே..

மூன்று கொலாம் அவர் கண்ணுதல் ஆவன
மூன்று கொலாம் அவர் சூலத்தின் மொய்யிலை
மூன்று கொலாம் கணை கையதுவில் நாண்
மூன்று கொலாம் புரம் எய்தன தாமே..

நாலு கொலாம் அவர்தம் முகம் ஆவன
நாலு கொலாம் சனனம் முதற் தோற்றம்
நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாம் மறை பாடின தாமே..

அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம்
அஞ்சு கொலாம்  அவர் வெல்புலன் ஆவன
அஞ்சு கொலாம்  அவர் காயப்பட்டான் கணை
அஞ்சு கொலாம்  ஆடின தாமே..

ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறு கொலாம் அவர் தார்மிசை வண்டின்கால்
ஆறு கொலாம் சுவை ஆக்கின தாமே..

ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல்
ஏழு கொலாம் அவர் ஆளும் உலகங்கள்
ஏழு கொலாம் இசை ஆக்கின தாமே..

எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டு கொலாம் அவர்சூடும் இனமலர்
எட்டு கொலாம் அவர் தோளிணை ஆவன
எட்டு கொலாம் திசை ஆக்கின தாமே..

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
 ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடம் தானே..

பத்து கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின் பல்
பத்து கொலாம் எயிறுந் நெரிந் துக்கன
பத்து கொலாம் அவர் காயப்பட்டான் தலை
பத்து கொலாம் அடியார் செய்கை தானே..
* * *

இத்திருப்பதிகம் எண் அலங்காரமாக அமைந்துள்ளது..

திருப்பதிகத்தின் பத்து பாடல்களிலும் -
ஒன்று முதல் பத்து வரையான எண்கள் பயின்று வருகின்றன..

இத்திருத்தலம் சூரியனும் சந்திரனும் வழிபடுகின்ற பெருஞ்சிறப்பினை உடையது..

பங்குனி உத்திர நாளன்று 
சூரியன் உதயாதி நாழிகையில் 
தனது இளங்கதிர்களால் மூலத்தானத்தினுள்ளிருக்கும்
சிவலிங்கத் திருமேனியைத் தழுவி மகிழ்கின்றான்...

தொடர்ந்து - பங்குனி மாத நிறைநிலா நாளன்று..
சந்திரன் கீழ் வானில் உதித்தெழும் வேளையில் -
தனது பொற்கதிர்களால் - மூலத்தானத்தினுள்ளிருக்கும்
சிவலிங்கத் திருமேனியைத் தழுவி மகிழ்கின்றான்...

கிழக்கு நோக்கிய திருக்கோயில்.. 
ஆனாலும், கிழக்கு வாசலின் வழியாக திருக்கோயிலினுள் நுழைய முடியாது..

இத் திருக்கோயிலில் கிழக்கு வாசல் ராஜகோபுரம் கிடையாது..

ஏனெனில் - திருக்கோயிலின் வாசலிலேயே சந்திர புஷ்கரணி...

திருக்கோயிலுக்கு தெற்கு வாசலில் தான் ராஜகோபுரம்..

திருச்சுற்றில் விஷம் தீர்த்த விநாயர் சந்நிதி...

கிழக்கு நோக்கியவாறு -
அருள் பொழியும் ஐயன் ஸ்ரீ கயிலாய நாதன் சந்நிதி...

இத் திருச்சந்நிதியில் தான் -
அப்பூதி அடிகளின் மகன் மீண்டெழுவதற்காகத் 
திருப்பதிகம் பாடியருளினார் - அப்பர் ஸ்வாமிகள்...

விஷம் தீர்ந்த மகன் விளையாட்டுப் பிள்ளையாகத் துள்ளி எழுந்தது
இந்தச் சந்நிதியில் தான்..

தென்திசை நோக்கியவாறு 
பெரிய நாயகி - எனப் பேரருள் வழங்கும் பிரஹந்நாயகி...

மேலும் - திருச்சுற்றில் அழகே உருவாக
வள்ளி தேவசேனா சமேதரனாக திருக்குமரன்...

திருச்சுற்றில் சண்டிகேஸ்வரரும் சண்டிகேஸ்வரியும்
ஸ்ரீ துர்கையும் எட்டுத் திருக்கரங்களுடன் ஸ்ரீ வயிரவரும் விளங்குகின்றனர்...

மேலும் சிறப்புக்குரியதாக உள் மண்டபத்தில்
அப்பூதி அடிகளும் அவரது இல்லத்தரசி அருள்மொழி அம்மையார்.. 

இவர்களுடன் அவர்தம் மகன்களாகிய பெரிய திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு கூப்பிய கரங்களுடன் விளங்குகின்றனர்..

ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள்
உச்சிக் குடுமியுடன் உழவாரப் படை ஏந்திய திருக்கோலத்தினராகத் திகழும்
அப்பர் ஸ்வாமிகளின் கருணை ததும்பும் திருமுகத்தை நாளெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்..

திருவையாற்றில் இருந்து கிழக்காக
கும்பகோணம் செல்லும் சாலையில் திருப்பழனத்தை அடுத்து
4 கி.மீ. தொலைவில் உள்ளது - திங்களூர்..

பிரதான சாலையில் இருந்து வயல்வெளிகளின் ஊடாக ஒரு கி.மீ. தூரம் நடந்தால் திருக்கோயிலை அடையலாம்...

திருக்கோயில் வரை நல்ல சாலை வசதி உண்டு..
திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில்
ஆட்டோக்கள் இயங்குகின்றன..

தஞ்சையிலிருந்து 14 கி.மீ. தொலைவு..

தஞ்சை நகர பேருந்து நிலையத்திலிருந்து கணபதி அக்ரஹாரம் செல்லும் பேருந்துகள் திங்களூர் வழியாகச் செல்கின்றன..

திங்களூர் திருத்தலத்தை மனதாரத் தரிசித்து
தீவினை தீர வேண்டும் .. தீங்குகள் அகல வேண்டும்..
மக்களை வாட்டும் விஷக் காய்ச்சல் ஒழிய வேண்டும்..
நோயுற்றோர் நலம் பெற்று வாழ வேண்டும்...
- என, எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டிக் கொள்வோம்..


நாயினுங் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சின் உள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகின் நோக்கி நீஅருள் செய்வாயே!.. (4/76)
- திருநாவுக்கரசர் -

நீயன்றி யாருமில்லை வழிகாட்டு
இறைவா நெஞ்சுருக வேண்டுகிறோம் ஒளிகாட்டு!..
- கவியரசர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***